119. அருள்மிகு மேகநாத சுவாமி கோயில்
இறைவன் மேகநாத சுவாமி, முயற்சி நாதேஸ்வரர்
இறைவி லலிதாம்பிகை, சௌந்தர்யநாயகி
தீர்த்தம் சூரிய புஷ்கரணி
தல விருட்சம் வில்வ மரம்
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருமீயச்சூர், தமிழ்நாடு
வழிகாட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேரளத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் கம்பூர் இரயில்வே கேட் கடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். திருவாரூர், நன்னிலம், பூந்தோட்டம், பேரளம் ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. பேரளம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 1.5 கி.மீ. தொலைவு
தலச்சிறப்பு

Tirumeeyachur Gopuramகாஷ்யபரின் மனைவியர்களுள் ஒருவரான வினதைக்கு கருடனும், கர்த்துருவும் குறை உடலுடன் அருணனும் பிறந்தனர். கர்த்துரு சிவபெருமானை துதிக்க, அவரும் "அருணன் சூரியனின் ஏழு குதிரைகள் பூட்டிய தேரை அவன் ஓட்டுவான் என்றும், அவன் பெயராலேயே சூரிய உதயத்தை 'அருணோதயம்' என்று அழைப்பார்கள்" என்றும் அருளினார். இதைக் கேட்ட சூரியன் குறைபாடுடைய இவன் எப்படி எனது தேரை ஓட்டுவான் என்று ஏளனம் செய்ய, சிவபெருமான் அவனைச் சபித்தார்.

தனது தவறுக்கு வருந்திய சூரியன், தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்குவதற்கு இத்தலத்திற்கு வந்து சுவாமியையும், அம்பாளையும் யானை மீது எழுந்தருளச் செய்து வழிபட்டு, தமக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொண்டார். அதனால் இத்தலம் 'மீயச்சூர்' என்று பெயர் பெற்றது.

Tirumeeyachur Ammanஇத்தலத்து மூலவர் 'மேகநாத சுவாமி', அழகிய சிறிய லிங்க வடிவில் அருள்புரிகின்றார். சுயம்பு மூர்த்தி. 'முயற்சி நாதேஸ்வரர், 'மிஹிரா அருணேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகின்றார். 'மிகராருண பூஷணேஸ்வரர்' என்னும் திருநாமத்தை 'மிஹிரா அருணேஸ்வரர்' என்று எழுதி வைத்துள்ளனர். அம்பிகை சன்னதி உள்ளது. 'சௌந்தர்ய நாயகி' என்றும் 'லலிதாம்பிகை' என்றும் வணங்கப்படுகின்றாள். அம்பாள் ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில், அபய, வரத அஸ்தங்களுடன், வலது காலை மடித்து, இடது காலை தரையில் ஊன்றியும் பெயருக்கு ஏற்றபடி சௌந்தர்யமாகக் காட்சித் தருகின்றாள். இங்குதான் அகத்திய முனிவர் அம்பிகையை போற்றி வழிபடக்கூடிய சிறந்த மந்திரங்களான 'லலிதா சகஸ்ரநாம'த்தையும், 'லலிதாம்பிகா நவரத்தின மாலை'யையும் பாடி வழிபட்டார்.

Tirumeeyachur Sculptureகோஷ்டத்தில் நர்த்தன கணபதி, க்ஷேத்ர புராணேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சந்திரசேகரர், துர்க்கை, ரிஷபாருடனர் ஆகியோர் காட்சி தருகின்றனர். கோஷ்டத்தில் உள்ள அனைத்து திருவுருவங்களும் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது. அதிலும் க்ஷேத்திர புராணேஸ்வரர் சிற்பம் மிகவும் அற்புதமானது. மூலவர் கருவறையின் மீதுள்ள விமானம் 'கஜபிருஷ்ட வடிவில்' அமைந்துள்ளது.

பிரகாரத்தில் நாகர்கள், சேக்கிழார், நால்வர் பெருமக்கள், சப்த மாதர்கள் வழிபட்ட சப்த லிங்கங்கள், விநாயகர், இந்திர லிங்கம், யம லிங்கம், அக்னி லிங்கம், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமண்யர், வருண லிங்கம், நிருத்வி லிங்கம், அகத்தியர், குபேர லிங்கம், ஈசான லிங்கம், மஹாலட்சுமி, அப்பு லிங்கம், அருணாசலேஸ்வரர், நடராஜர், பைரவர், சூரியன், சண்டேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.

Tirumeeyachur Praharamசூரியனின் மகன்களான எமதர்மனும், சனீஸ்வரனும் இத்தலத்தில்தான் பிறந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. சித்திரை மாதம் 21 ஆம் தேதி முதல் ஒரு வாரம் சூரியனின் கதிர்கள் மூலவர் திருமேனி மீது விழுகின்றன.

இக்கோயிலுக்கு உள்ளேயே மூலவர் சன்னதிக்கு வடக்குப் புறத்தில் 'மீயச்சூர் இளங்கோயில்' என்னும் திருநாவுக்கரசர் பாடிய மற்றொரு தேவாரத் தலம் உள்ளது.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com